logo

தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்துங்கள்! CBI க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!

தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்துங்கள்! CBI க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!

டெல்லி: நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகள் மெல்லியதாக பரவி வருவதாகவும், அவை தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி சிபிஐ உருவாக்கப்பட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சிபிஐ-ன் முதல் இயக்குநரான டிபி கோஹ்லியின் நினைவாக, டிபி கோஹ்லி நினைவு விரிவுரை நிகழ்த்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விரிவுரையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகள் மெல்லியதாக பரவி வருகிறது, அவை தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது,

"ஊழல்-எதிர்ப்பு புலனாய்வு அமைப்பான சிபிஐ அதன் பங்கிற்கு அப்பால் உள்ள சில வழக்குகளிலும் தலையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது சிபிஐ-யின் நோக்கத்தை தாண்டி செயல்பட வேண்டிய பொறுப்பை சுமத்துகிறது.

நாட்டின் முதன்மை விசாரணை அமைப்புகளை மிக மெல்லியதாக பரப்பிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான பொருளாதார குற்றங்கள் தொடர்பான குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் முதலில் சிபிஐதான் வழக்குப்பதிவு செய்தது. அதன் பின்னரே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவரை கைது செய்தது. அதேபோல டெல்லி அமைச்சர்கள் 3 பேர் தற்போது சிறையில் இருக்கின்றனர். இதற்கும் மத்திய விசாரணை/புலனாய்வு அமைப்புகள் முக்கிய காரணமாகும்.

அதேபோல மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்பட விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும் எதிரக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0 views